Monday, August 6, 2012

வானில் தீ

அந்திக்கு முன்பன முன்மாலை நேரம் 
வழக்கிற்கு மாறான வானின் நிறம்

ஒளி நேரத்தில் இருள் சூழ்ந்தது 
இருளுடன் கூடி மழையும் பொழிந்தது

மேக மிரங்கி பூமி குளிர்ந்தபின் 
தெளிந்த வானத்தில் மஞ்சள் சூரியன்

அந்தியின் எல்லை சற்றே நீண்டு 
தீப்பிடித்தது....  தீ பிடித்தது 

கதிர்கள் கரம் குவித்து இழுத்து 
வீட்டின் மூன்றாம் கட்டிற்கு அழைத்தது 

அண்ணாந்து பார்த்தல் அழகு வர்ணங்கள்... 
ஐந்து பூதமும் ஒன்றன் பிடியில் 

வானின் ஒருபாதி மஞ்சள் இறைத்திருக்க... 
மறுபாதி அடர் நீலம் கரைத்திருக்க...
தூரத்தில் தெரிந்த வெளிர் நீலம் 
மஞ்சளுடன் நீலம் ஒருமித்த சாம்பல் 
சிகப்புடன் நீலம் இணைந்த ஊதா
அத்தனையும் காண கண்கள் போதா

உற்று கவனித்து சற்றே பார்த்தல் 
வெளிர் நீலத்தில் கடலொன்று தெரிய ...
கடலுக்கு நடுவே மேகத் தீவுகள்.
கடலை... தீவா... மேகமா... வானமா...
ஏதுவென் ரறியா முடியா ஒன்று 
தீப்பற்றி   எரிந்தது...

தீயை அணைக்க காற்று எத்தனிக்க 
தூரலும் மேகமும் தழல் தணிக்க 
த்வந்த யுத்தம் வான வெளியில் 
தீயை மெல்ல மேகம் விழுங்க 
ஒன்றிற் குள்ளே ஐம் பூதங்களும் ?!?!?!

ஒன்று ஒன்றிற் குள்ளே ஐந்து 
ஆராய்ந்தால் வெவ்வேறாய் தெரியும்
அறியவும் செய்தால் ஒன்றென்று புரியும். 

 



  

Tuesday, July 10, 2012

மழை

 அந்தி மயங்கும் மாலை நேரம்
அழகுத் தூரலில் நனைந்ததென் தேகம் 
இதயம் விரிந்து மனம் உவந்தேன் 
இதழை சிப்பியை போல் திறந்தேன் 
மழை முத்தை சுவைத்து உயிர்த்தேன்

கருமேக அழகன் திடமுடன் தோன்ற 
சூரிய மங்கை நாணி மறைய
அவள்தன் கரத்தை விரித்து அழைக்க 
மேகனோ ஆசையில் கரைந்து உருக
உருகினேன் நானும் காட்சியை கண்டு 

நதிநீர் எங்கும் தங்கம் வார்க்க 
மழைநீர் பட்டு துளியாய் தெறிக்க 
கையில் துளியை ஏந்தி பிடிக்க 
கம்மல் ஆக்கி அணிய நினைக்க 
வெள்ளித் தண்ணீர் கையில் நகைத்தது.....  
      

தமிழா? நீயா?


அமுதை உண்டு அமுதை உண்டு
மயங்கும் வண்டைபோல்
உனைப்பற்றி  
கவிதை  எண்ணி கவிதை எண்ணி
இன்றென் உறக்கமும் ஒருவிதமான
கிறக்கத்துடனே செல்கிறது.
கிறக்கம் தரும் மோடி வித்தை செய்வது
தமிழா? நீயா?

எவ்வளவு பிடிக்கும்

உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்?
விடை காண முனைந்தேன்.
விளைவாய் கவிதை புனைந்தேன்...

அடிவானத்தை  தொட  எவ்வளவு
அடிவைக்க  வேண்டுமோ அவ்வளவு ...
அம்புலியில்  இறங்க  எவ்வளவு
ஆகாயத்தில் பறக்கவேண்டுமோ அவ்வளவு...
அண்டத்திற்கு  எல்லைகாண எவ்வளவு
அப்யாசம் செயவேண்டுமோ அவ்வளவு ...
ஆம்... அவ்வளவு பிடிக்கும்.

- பி.ஸ்வர்ண லக்ஷ்மி